சிவாஜியை பொறுத்த வரை ரஜினி படத்தை சங்கர் இயக்கியிருக்கிறார் என்று சொல்வதை விட சங்கர் படத்தில் ரஜினி மிளிர்ந்திருக்கிறார் என்று சொல்வதே சாலச்சிறந்தது. கல்லூரி ஆரம்பிப்பார், அப்பாவை கொன்றவர்களை பழிதீர்ப்பார், என்று ஆளாளுக்கு சொல்லப்பட்ட கதைகளிலுருந்து முற்றிலும் மாறுபட்டு கருப்பு பணத்தை ஒளித்து வைத்திருக்கும் பணக்கார முதலைகளின் முகமூடியை கிழித்துப் பார்க்கும் கோடாரிக்கத்தி இந்த சிவாஜி. கையில் விலங்கோடு முகத்தில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு இறங்கும் ரஜினி, அவருக்காக பரிந்து பேசி கண்ணீர் சிந்தும் இந்த சமுதாயம், முதல் காட்சியில் தொடங்குகிறது விறுவிறுப்பு.
முதல் பாதி முற்றிலுமாய் விவேக்கோடு சேர்ந்து காமெடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் தலைவர். "சாமி கும்பிடப் போகல மாமி கும்பிடப் போறோம்" என்று விவேக் சொல்வதில் தொடங்கி ஷ்ரேயாவுடனான ஒவ்வொரு காட்சியும் காமெடி கலகல. வாக்காளர் அடையாள அட்டை அதிகாரிகளாய் ஷ்ரேயா வீட்டுக்குள் நுழைந்து அவரை "ரா ரா" பாடலுக்கு நடனாமாட வைக்கும் காமெடி, உழைப்பாளி பரமசிவன் காமெடி தோற்றது போங்கள், அத்தனை ஒரு கும்மாளம்."பழக வரும் தமிழ்ச்செல்வி குடும்பத்தாரை பழக பழக என்று அன்போடு வரவேற்கிறோம்", என்று வீட்டுக்கு வரும் ஷ்ரேயாவை "பப்பு பூவா, புஜ்ஜூ" என்று கொஞ்சும் குழந்தைத்தனதிலும், டூயட் பாடல்களில் ரொமான்ஸிலும் மீண்டும் சதமடித்திருக்கிறார் தலைவர்.
இத்தனைக்கிடையிலும் தன்னுடைய லட்சிய கனவான பல்கலைகழகம் மற்றும் மருத்துவமனை தொடங்கும் முயற்சியில் நாடெங்கும் லஞ்சமும் ஊழலும் மண்டிக்கிடப்பது கண்டு மனம் வெறுக்கிறார் தலைவர். தலைவர் பல்கலைக்கழகமும் ஆஸ்பத்திரியும் தொடங்குவதை தனக்கு போட்டியாக நினைக்கும் பணக்கார முதலை ஆதிஷேஷனாக சுமன். 'தீ' படத்தில் தலைவரின் தம்பியாக நடித்த அதே சுமன். கனத்த உடம்போடு தங்கப்பல் வைத்துக்கொண்டு அட்டகாசமான ரீஎன்ட்ரீ. அவர் கொடுக்கும் இடைஞ்சல்களால் தலைவரின் கனவுப் பல்கலைக்கழகம் பாதியிலேயே நிறுத்தப்பட, சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட சுமன் பிச்சையாக போடும் ஒரு ரூபாய் நாணயத்தோடு வீதிக்கு வருகிறார் தலைவர். "இனி சிங்கப்பாதைதான்டா என்று " தலைவர் கோபக்கனலோடு சொல்லுவதாய் முடியும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் அதிரடிக்கு பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இத்தனைக்கிடையிலும் தன்னுடைய லட்சிய கனவான பல்கலைகழகம் மற்றும் மருத்துவமனை தொடங்கும் முயற்சியில் நாடெங்கும் லஞ்சமும் ஊழலும் மண்டிக்கிடப்பது கண்டு மனம் வெறுக்கிறார் தலைவர். தலைவர் பல்கலைக்கழகமும் ஆஸ்பத்திரியும் தொடங்குவதை தனக்கு போட்டியாக நினைக்கும் பணக்கார முதலை ஆதிஷேஷனாக சுமன். 'தீ' படத்தில் தலைவரின் தம்பியாக நடித்த அதே சுமன். கனத்த உடம்போடு தங்கப்பல் வைத்துக்கொண்டு அட்டகாசமான ரீஎன்ட்ரீ. அவர் கொடுக்கும் இடைஞ்சல்களால் தலைவரின் கனவுப் பல்கலைக்கழகம் பாதியிலேயே நிறுத்தப்பட, சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட சுமன் பிச்சையாக போடும் ஒரு ரூபாய் நாணயத்தோடு வீதிக்கு வருகிறார் தலைவர். "இனி சிங்கப்பாதைதான்டா என்று " தலைவர் கோபக்கனலோடு சொல்லுவதாய் முடியும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் அதிரடிக்கு பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் பாதியில் "பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல" என்று சொல்லிக்கொண்டு தலைவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அதிரடி கோலாகலம் தான்.சுமனிடம் மட்டுமே 200 கோடி ரூபாய் கருப்புப்பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ரஜினி அது போல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கருப்புபணத்தை வெளியே கொண்டு வருவதற்காக செய்யும் "ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்" ஜனரஞ்சகம். அத்தனை கருப்புபணத்தையும் வெள்ளைப்பணமாக மாற்றி அதை அப்படியே சிவாஜி ஃபவுண்டேஷனாக மாற்றும் யுக்தி முத்தாய்ப்பான ஷங்கர் டச். இதற்கிடையில் ஷ்ரேயா செய்யும் ஒரு காரியம் தலைவரின் உயிருக்கே ஆபத்தாகி விட மறுபிறவி எடுத்து எம்.ஜி.ஆர் ராய் மொட்டைத்தலையில் தபேலா தட்டிக்கொண்டு வரும் காட்சி ரஜினி ரசிகர்களுக்கு சத்தியமான ஹார்ட் அட்டாக். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் கொஞ்சம் நீளமோ என்று எண்ண வைக்கிறது.
திரைக்கதையில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கொண்டு சென்றதில் மீண்டுமொரு முறை ஷங்கர் ஜெயித்திருக்கிறார்." Voice Recogonition Information security system" கொண்ட Laptop, "Shock scopy " கொடுத்து உயிர் பிழைக்க வைப்பது என்று உலக விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பங்களை படத்தில் சிதற விட்டு விளையாடியிருக்கிறார் ஷங்கர்.படத்தில் ரஜினியின் அப்பா அம்மாவாக வரும் வடிவுக்கரசி, மணிவண்ணன் ஷ்ரெயாவின் அப்பா அம்மவாக வரும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, உமா டாக்டராக வரும் ரகுவரன் ஆகியோரும் தங்களுக்கான பங்கை செவ்வனே செய்துள்ளனர். ஷ்ரேயாவின் பக்கத்து வீட்டுக்காரர் தொண்டைமானாக பேராசிரியர்.சாலமன் பாப்பையா. வரும் முதல் காட்சியிலுருந்தே காமெடி லூட்டி அடித்திருக்கிறார்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்று கூறி ரஜினி, ஷ்ரேயா திருமணத்திற்கு திருமாங்கல்யம் எடுத்து கொடுக்கும் காட்சி வரை கலக்கியிருக்கிறார் பாப்பையா.
பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். ஆனால் ஸ்கோர் செய்வது "அதிரடிகாரன்" பாடலும் "ஒரு கூடை சன்லைட்" பாடலும்தான்."அதிரடிகாரன்" பாடலுக்கு லீட் எடுக்கும் விதமாய் ரஜினி "சிவாஜி கணேஷன், எம்.ஜி.ஆர், கமலஹாசன்" ஆகியோரைப் போல வேடமிட்டு மிமிக்ரி நடனமாடியிருப்பது ரசிக்கத்தகுந்த விஷயம். ஒரு கூடை பாடலில் ரஜினியின் மேக்கப், அப்பப்பா!!! உண்மையான அமெரிக்கர்கள் கூட அப்படி வெள்ளையாக இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு வெள்ளைத்தமிழனாய் ரஜினி."பல்லேலக்கா" பாடலிலும் "வாஜி வாஜி" பாடலிலும் தோட்டாதரணியின் அனுபவமிக்க செட் கைங்கரியம் மிளிர்கிறது. பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் படமாக்கிய விதத்துக்காக கே.வி.ஆனந்த்துக்கு ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ரிய சபாஷ். சுஜாதவின் வசனங்கள், அங்கங்கு தத்துவ தென்றலாய், அங்கங்கு அனல் கக்கும் தீப்பொறியாய், சில இடங்களில் சிரிப்புப் பட்டாசாய். சண்டைக்காட்சிகளில் அதிகமாய் மெனக்கெட்டிருக்கிறார் ரஜினி. உபயம்:பீட்டர் ஹெய்ன். அதற்காக அவருக்கும் ஒரு ஷொட்டு. பிண்ணனி இசையில் பல மாறுதல்கள் காட்டி பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.
ரஜினி ரசிகர்களுக்கும் குறையில்லாமல், அனைவரும் வாங்குகிற வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்லும் திரைப்படத்தை கொடுத்தற்காக "ஷங்கர், ரஜினி,ஏ.வி.எம்" கூட்டணிக்கு மனதார்ந்த நன்றிகள்."
மொத்தத்தில் இந்த சிவாஜி "சத்ரபதி", "திரையுலக சக்கரவர்த்தி".