Wednesday, September 13, 2006

கண்டிப்பாடா செல்லம்...தேன்கூடு போட்டிக்காக...

மு.குறிப்பு :: ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சில விஷயங்களை படம் பிடிக்க முற்பட்டதில் கதை கொஞ்சம் நீளமாகி விட்டது. படித்து விட்டு நிறை குறைகளைச் சொல்லுங்கள்



அன்று கல்லூரியின் முதல் நாள்....
அறிமுகப் படலங்கள் முடிந்து விடுதியில் வந்து படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. காதுகளில் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது "ராதிகா ப்ரம் சென்னை ராதிகா ப்ரம் சென்னை". எத்துணை அழகாக இருந்தாள் அவள். வெளிர் மஞ்சள் நிறச் சுடிதாரில் தேவதை மாதிரியல்லவா இருந்தாள். கொஞ்சம் டூயட் பட நாயகி மீனாட்சி சேஷாத்ரி சாயல் அவளுக்கு. அவள் முகத்தில் விழுந்த முன்முடிக் கீற்றை விலக்கியபடியே சொன்னதும் சொல்லி முடிக்கும் பொழுது அவள் பூத்த புன்னகையும் அவனுக்குள் மீண்டும் மீண்டும் நிழலாடியது. "இப்படியெல்லாம் கூட அழகான பொண்ணுங்க இருப்பாங்களா?" தனக்குத் தானே இந்தக் கேள்வியை நூறாவது முறையாகக் கேட்டுக் கொண்டான். இப்படியே அவனுடைய ஆரம்ப நாட்கள் ஓடத் தொடங்கியது. விடுதி வாழ்க்கையும் களை கட்டத் தொடங்கியது. சிகெரட், தண்ணி என நித்தம் ஒரு புது அனுபவம். புதுப்புது நண்பர்கள். இத்தணைக்கும் நடுவில் அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே தினமும் கல்லூரி சென்று வந்தான் அவன். நாட்கள் செல்லச் செல்ல அவன் மனதின் கேள்வி மட்டும் மாறத் தொடங்கியது "இவ்ளோ அழகான பொண்ணு நமக்குக் கிடைப்பாளா?". அவனுக்கு உள்ளிருந்தே ஒரு பட்சி சொல்லியது " கண்டிப்பாடா! முயற்சி தான் பண்ணிப் பாரேன்". "பாக்கலாம் பாக்கலாம்" நினைத்துக் கொண்டான் அவன்.

இப்படியே ஆறு மாதங்கள் ஆகிப் போனது. அழகின் மூலங்களைக் கொண்டு அரைத்து செய்யப்பட்ட அவள் ஆங்கிலத்தின் மூலங்களை அரைத்து ஒரு செமினார் எடுத்ததில் கதறித் தான் போனது அந்த கங்கநாயக்கம்பட்டிக் காளை. "ஆத்தாடி என்னமா இங்கிலீபீஸ் பேசுறா, நமக்கு ஒத்து வருமா?" நினைத்த மாத்திரத்தில் பட்சி சொல்லியது "என்னடா பெரிய இங்கீலீஷ், நாலு நாள் படிச்சா உனக்கு கூடத் தான்டா வரும்". "ஆமா ஆமா" நினைத்துக் கொண்டான் அவன். நாட்களும் நகர்ந்து கொண்டே போனது. வகுப்பறைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் அனுதினமும் பார்வையாலேயே காதல் பழகிக் கொண்டிருந்தான் அவன். அன்று கல்லூரி தின விழா. கலை நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியிருந்தது. மாணவர்கள் விசிலடித்தும் இருக்கைகளின் மேல் ஏறி நடனமாடியும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். அவனும் சகாக்களோடு சேர்ந்து ரயில் ஓட்டிக் கொண்டிருந்தான். மேடைக்கு வந்த தொகுப்பாளினி கூறினாள். "அடுத்ததாக பாடல். பாட வருபவர் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ராதிகா". கேட்டவுடனே முன்னால் ஓடிப்போய் அமர்ந்து கொண்டான் அவன். மேடையில் ஏறினாள் அவள். "ஊருசனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு, பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ தெரியலியே" அதி அற்புதமாக பாடினாள் அவள். அரண்டே போனான் அவன். "ஆத்தீ! என்னென்ன தெறமையெல்லாம் இருக்கு இந்த பொண்ணுக்கு". அவன் இதை யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு நான்கு நிகழ்ச்சிகள் கடந்து போயிருக்கும். மீண்டும் வந்த தொகுப்பாளினி "அடுத்தாக நடனம், ஆட வருவது ராதிகா முதலாமாண்டு கணிப்பொறியியல் துறை" என்று கூறிவிட்டு சென்றாள். "தகஜூம் தகஜூம் ததிங்கினத்தோம் தகஜூம்" முகபாவங்களைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தாள் அவள். ஏற்கனவே அரண்டிருந்தவன் மேலும் பதறிப் போனான். பட்சி சொல்லியது "கொஞ்சம் கஷ்டம்தான் போல". "இல்ல இல்ல பாக்கலாம்" தேற்றிக் கொண்டான் அவன்.

இப்படியே அந்த வருடம் ஓடிப்போனது. விடுமுறைக்கு வீட்டுக்கு போனவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. சதா அவள் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவன் வீட்டு டேப்ரிக்கார்டர் நித்தம் நூறு முறையாவது ஊரு சனங்களைத் தூங்க வைத்து ஊதக்காத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக இரண்டாம் வருடமும் தொடங்கியது. "இந்த வருஷம் அவகிட்ட கண்டிப்பா சொல்லிரணும்" அடிக்கடி இதையே நினைத்துக் கொண்டான். அந்த நிலையிலே அவன் தோழர்கள் கோடைக்கானல் வகுப்புச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஒருவாறாக அந்த நாளும் வந்தது. சரக்கு சரவெடி வீதம் ஓராயிரம் ஓ போட்டபடி தொடங்கியது சுற்றுலா. இரண்டு நாட்கள் சரியான ஆட்டம். மூன்றாவது நாள் காலையில் எல்லாரும் குணா குகைளுக்குச் சென்று விட அவன் மட்டும் அந்த மலைப்பாதையில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தால் ராதிகா மட்டும் தனியாக வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த விநாடி சிகரெட்டைப் போட்டு அணைத்தான். அவனருகில் வந்தாள் அவள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லக் கேட்டான்

" என்ன ராதிகா, நீ குணா கேவ்ஸ் போலியா?". அவன் அவளிடம் பேசும் முதல் வார்த்தை. கோடைக்கானலின் குளிரையும் மீறி ஒரு உஷ்ணம் அவன் உடல் முழுதும் பரவியதை அவனால் மட்டுமே உணர முடிந்தது.

"இல்லப்பா, தல வலிக்குற மாதிரி இருக்கு, அதான்" சாதரணமாகச் சொன்னாள் அவள்.

"ஏன், என்னாச்சு?"-அவன்.

"தெரியலப்பா, அத விடு. பாக்க பாப்பா மாதிரி இருந்துட்டு தம்மெல்லாம் அடிப்பியா நீ? ஹ்ம்" .

"இல்ல, எப்பவாச்சும் தான்".

"பாத்துக்கோ உடம்புக்கு நல்லதில்ல, அவ்ளோதான்".

"ம்ம்ம்..." முதல் முறையே எத்தனை அக்கறையாக பேசுகிறாள்!! அவனுக்கு வியப்பாகத் தான் இருந்தது.

"நேத்து ஒரு ரூம்ல தங்க வச்சீங்களே, அது ரூமா? வெந்நீரே வரல. நாங்க யாருமே குளிக்கல தெரியுமா?"இது அவள்.

"பனியில் நனையா விட்டாலும் ரோஜாப்பூ அழகுதான்! குளிக்காத நீயும்" உதட்டுக்குள் முனகினான் அவன்.

"என்ன சொன்ன?"

"ஒன்னுமில்ல, ஏதோ இன்னைக்கு மட்டும் தான் குளிக்காத மாதிரி இந்த அலட்டு அலட்டுற, பொண்ணுங்கள்லாம் வாரத்துக்கு ஒரு தடவ தான் குளிப்பீங்களாமே அதான் சொன்னேன்"

"ஓய், என்ன நக்கலா. நாங்கள்லாம் ஒன்னும் அப்படி கெடையாது தெரிஞ்சுக்கோ"
அதற்குள் அனைவரும் வந்து விட பேருந்தில் ஏறி புறப்பட்டார்கள். பல நூறு முறை கிள்ளி பார்த்துக் கொண்டான் இது நினைவா என்று. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவனுக்கு. "எப்படிப் பேசினேன் அவளிடம். ஏதோ பேசியாச்சு இனிமே படிப்படியா கொண்டு போறதுலதான் இருக்கு." நினைத்துக் கொண்டான் அவன். அன்று இரவே கல்லூரிக்குத் திரும்பினார்கள். அது முதல் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை உதிர்த்துச் சென்றாள் அவள். ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான் அவன். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் துறைக்கான சிம்போசியம் விழா வந்தது. சீனியர்களிடம் கெஞ்சி அவளையும் தன்னையும் இரண்டாம் ஆண்டிற்கான கோஆர்டினேட்டர்களாய் போட்டுக் கொண்டான். நேரே அவளிடம் சென்றான்,

"ராதிகா! சிம்போசியத்துக்காக உன்னையும் என்னையும் கோஆர்டினேட்டர்ஸா போட்ருக்காங்க. அது விஷயமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உன் ஹாஸ்டல் போன் நம்பர் குடு".
"ஹாஸ்டல் நம்பர் எதுக்குப்பா? இந்தா இது என்னோட மொபைல் நம்பர் 9894917877, இதுக்கே கால் பண்ணு".
தேவையோ தேவையில்லையோ அந்த நம்பருக்கு தினமும் கால் பண்ணத் தொடங்கினான். அவன் சொல்வதெற்கெல்லாம் "அப்படியே பண்ணிடலாம்" என்பதை மட்டுமே பதிலாக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். வீட்டில் ஒரு துரும்பைக் கூட இங்கும் அங்கும் அசைக்காதவன் விழுந்து விழுந்து வேலை பார்த்தான் சிம்போசியத்துக்கு. அன்று விழாவிற்கு முதல் நாள். அவளை அலைபேசியில் அழைத்தான்

"ஹலோ, சொல்லு"

"இல்ல இன்னக்கி டெக்கரேஷன் ஆர்டிக்கிள்ஸ் வாங்கப் போகனும், நீ கெளம்பி வா"
"எதுல போறது?"

"நானான்னா பசங்ககிட்ட பைக் வாங்கிட்டு போய்டுவேன். நீயும் வர்றேல்ல, அதுனால பஸ்ல தான் போகனும்.."

"இல்ல இல்ல... நீ பைக் வாங்கிட்டு வா, நம்ம போலாம்"

"சரி அப்டின்னா பத்து நிமிஷத்துல வர்றேன், நீ கேட் பக்கத்துல வெய்ட் பண்ணு"

அலைபேசியை அணைத்து விட்டு ஆனந்தக் கூத்தாடினான். "ஆஹா என்னெனல்லாமோ நடக்குதே". அவளை வண்டியில் கூட்டிச் சென்று பொருள்களெல்லாம் வாங்கி விட்டுப் பின்னர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். உணவருந்தினார்கள். கல்லூரிக்குத் திரும்பிய பிறகு விடிய விடிய டெக்கரேஷன் வேலை பார்த்தார்கள். வேலைக்கு இடையிடையாக பேசினான் பேசினான், அவன் சின்னப்பிள்ளையில் மாங்கா திருடியது முதல் இப்போ ஊர்ல நடந்த திருவிழா வரைக்கும் எல்லாம் பேசினான். அவளும் அன்யோன்யமாகவே பேசினாள். விழாவும் இனிதே நடைபெற்றது. அதற்குப் பிறகு வந்த அவளுடைய ஒவ்வொரு காலைப்பொழுது தொடங்கியதும் ஒவ்வொவொரு இரவு அடங்கியதும் அவனுடைய SMS களாலேயே தான்.அவளும் நன்றாகவே பழகினாள். ஆனாலும் அவனுக்குள் இருந்த பட்சி அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் இருந்தது " பேசுறதெல்லாம் சரி, ஆனா எப்படா சொல்லப் போற??". "இரு இரு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" அடக்கி வைத்தான். இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு நாள் இரவு அலைபேசி கதறியது 'ராதிகா காலிங்'. போனை எடுத்தான்
"ஹலோ"

"ஹலோ நான் ராதிகா பேசுறேன்"

"தெரியுது, சொல்லு"

"திருட்டு ராஸ்கல்"

"ஏய்.. எதுக்குத் திட்டுற இப்போ?"

"இன்னைக்கு புது பஸ்ஸ்டான்ட்ல நின்னு தம் அடிச்சிட்ருந்தியாமே, EEE கங்கா பாத்துட்டு வந்து சொன்னா"

"போட்டுக் குடுக்குறத தவிற வேற வேலயே கெடையாதா அந்த குள்ளவாத்துக்கு?"

"அவளத்திட்டாத, நீ அடிச்சியா, இல்லையா? சொல்லு"

"சும்மா பசங்க கிட்ட ஒரு பஃப் வாங்குனேன் அவ்ளோதான்."

"பேசாதடா நீ. எத்தன தடவ சொல்றது ஒனக்கு .இனிமேல் என்கிட்ட தயவு செய்து பேசாத" இணைப்பைத் துண்டித்தாள்.
அவனுக்கு என்னவோ போல் இருந்தது. திரும்ப அழைத்தான் அவளை. எடுத்த மாத்திரத்தில்

"இனிமே உன்கூட பேச மாட்டேன்னு சொல்றேன்ல, எதுக்குடா கால் பண்ற?"

"ஸாரி! இனிமே தம் அடிக்கல, போதுமா?"

"ப்ராமிஸ்?"

"சத்தியமா!"

"சரி ஒழி! இனிமே நானும் சண்டை போட மாட்டேன், ஸாரி"

"இன்னோரு விஷயம்"

"என்ன சொல்லு?"

"எங்க அம்மாவுக்கப்புறம் ஒருத்தர் பேச்ச மதிக்கிறேன்னா அது ஒன்னோடத மட்டும்தான், தெரியுமா?"

"ஹ்ம்ம்ம், என்னவோ நல்லா இருந்தா சரி... வைக்கட்டுமா"

"ம்ம்ம்.. குட் நைட்."

"பை" .....
போனை வைத்தவனுக்கு தன் காதலை சொல்லி விட்டது போன்ற உணர்வு. "இதுல ஏதாவது புரிஞ்சிருக்குமா அவளுக்கு? பாக்கலாம்" நினைத்துக் கொண்டான்.
அந்த வார விடுமுறையிலேயே அவனை வீட்டிற்கு கூட்டிப் போய் அவள் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ராதிகா. அத்துணை அன்பானவர்களாய் அவள் பெற்றோர். அது அவனுக்குள்ளிருந்த பட்சியை மேலும் மேலும் தூண்டி விட்டது "டேய் இவள விட்ராதடா, சீக்கிரமா சொல்லு". "இரு இரு அவசரப்படாத" அவன் அத்தணையையும் கட்டுபடுத்திக் கொண்டான்.

ஒருவாறாக இரண்டாம் ஆண்டும் முடிவுக்கு வந்தது. அந்த விடுமுறையின் 24*7 ம் SMS, மிஸ்டு கால், லாங் கால். ஸார்ட் கால்னு அலைபேசியிலேயே அடங்கிப் போனது இருவருக்கும். மீண்டும் கல்லூரி தொடங்கி ஒரு வாரம் போயிருந்தது. உள்ளிருந்த பட்சி அவனைப் போட்டு துளைத்தெடுக்க ஒரு முடிவோடு அவளுக்கு கால் செய்தான். மறுமுனையில்
"ஹலோ சொல்டா"

"என்ன பண்ணிட்ருக்க?"

"இப்பதான் அப்சர்வேஷன் எழுதிட்ருக்கேன். இனி ரெக்கார்ட் எழுதனும், எதுக்குடா?"

"இல்ல, சும்மா பேசலாம்னுதான்."

"சரி சொல்லு என்ன விஷயம்?"

"இங்க ஹாஸ்டல்ல பசங்க சதா உன்னையும் என்னையும் வச்சு ஓட்டிகிட்டே இருக்காங்க, தெரியுமா?"

"அவங்க பாட்டுக்கு ஓட்டிட்டு போட்டும், நீ கண்டுக்காதடா"

"அது இல்ல ராதிகா, நான் லீவ்ல வீட்டுக்கு போயிருந்தப்போ டெய்லி உன்கூட பேசுனாலும் உன்னைய பாக்கனும் போலவே இருந்துச்சு, தெரியுமா?"

"அப்டினா ஒரு நாள் கெளம்பி வந்ருக்க வேண்டியதுதானடா?" சிறிதும் சலனமில்லாமல் பேசினாள் அவள்.

"இங்க பாரு ராதிகா, புரியாம பேசாத. இப்பல்லாம் பசங்க உன்னையும் என்னையும் வச்சு ஓட்டேல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் செல்லுக்கு வர்ற ஒவ்வொரு மெஸேஜும் ஒவ்வொரு காலும் உன்னோடதாதான் இருக்கணும்னு தோணுது. இதெல்லாம் ஏன்னே எனக்கு தெரியல. இதுக்கு பேருதான் காதல்னா, சத்தியமா சொல்றேன், நா உன்ன லவ் பண்றேன்"

"திருட்டுநாயே, உன்னையப் போய் ஃப்ரெண்டுனு நெனச்சேன் பாரு, என்னைய சொல்லனும்." அழுகை பீறிட்டது அவளுக்கு.

"ராதிகா... ராதிகா..."

"இனிமே ஜென்மத்துக்கும் என்கிட்ட பேசாத, உன்னையெல்லாம் நம்புனது என் தப்பு, வச்சிரு" செல்லை ஆஃப் பண்ணி விட்டாள் அவள். எவ்வளவோ முயற்சித்தும் அவளிடம் பேச முடியவில்லை. ஒரு வாரம் கழித்துத் தான் கல்லுரிக்கு வந்தாள். பேச முனைந்தவனை "ஓடிப்போயிரு" என்று நாயை விட கேவலமாக அடித்து துரத்தினாள். அதுவரை ஒரு நாளைக்கு 1 2 என்று புகைத்துக் கொண்டிருந்தவன் 5 பாக்கெட் சிகரெட் அடிக்கத் தொடங்கினான். வாரத்தில் 5 நாட்கள் தண்ணி அடிக்கத் தொடங்கினான். அதுவரை 80%க்கு குறையாமல் எடுத்து வந்தவன் அந்த செமஸ்டரின் அனைத்து பாடங்களிலும் கோட்டை விட்டான். ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவனுக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. சில நண்பர்களின் உதவியோடும் ஆறுதலோடும் விரைவில் வெளியே வந்தான். அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவன் நண்பர்கள் சிலர் ராதிகாவை பொழுதுக்கும் வசைபாடிக் கொண்டிருந்தனர் "மச்சி அவள்லாம் ஒரு பொண்ணாடா? அழகாயிருக்கோம்ன்ற திமிருடா. உன்னைய நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாளே, நாசமாத்தான்டா போவா" ஆனால் யார் என்ன சொன்னாலும் அவனுக்கு ஒருபொழுதும் அவள் மேல் கோபம் வரவேயில்லை. ஆனால் சூறாவளி மாதிரி படித்து அடுத்த செமஸ்டரிலேயே அத்தனை அரியர்களையும் தூக்கினான்.

நான்காம் ஆண்டும் துவங்கியது. மாணவர்கள் ஆப்டிட்யூடையும் ஆங்கிலத்தையும் துரத்தி ஓடிக் கொண்டிருந்தார்கள். ப்ளேஸ்மன்ட்டும் ஆரம்பமானது. ராதிகாவின் அழகையும் அறிவையும் அவளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போனது கீகூள் பன்னாட்டு நிறுவனம். அவனுக்கும் அவன் அட்டென்ட் பண்ணிய எட்டாவது கம்பெனியான டி.ஃ.ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நண்பர்களைப் பிரியும் சோகம், ஆட்டோகிராப் நோட்டுகள், ஏப்ரல் மாதத்தில் மாதிரி நண்பர்கள் வீடுகளுக்கு டூர், இதற்கிடையிலே காசு கொடுத்து வாங்கிய டப்பா ப்ராஜக்ட் என்று முடிவை நெருங்கியிருந்தது அந்த ஆண்டு. "மச்சான்களா பிரிய போறோமேடா" என்று சோகத்தை சாக்காக வைத்து கடைசி முப்பது நாளும் தினமும் தண்ணி அடித்ததில் போதையோடு போதையாக ஓடிமுடிந்தது அவ்ன் கல்லூரி வாழ்க்கை . இரண்டு மாத ஓய்விற்குப் பின் வேலையில் சேர்ந்தான் அவன். ட்ரெயினிங் முடித்து விட்டு அவன் பண்ணிய முதல் ப்ராஜக்ட்டே அமெரிக்க உயர் அலுவகத்திலிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றது. வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களிலேயே முதல் ஆன்சைட் வாய்ப்பு. அமெரிக்கா சென்று திரும்பியவுடனே பதவி உயர்வு என்று இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு இலக்கச் சம்பளம் எட்டியிருந்தான் அவன். இத்தனைக்கிடையிலும் "ச்சே எவ்ளோ நல்ல பொண்ணு, நாமதான் லூசுத்தனம் பண்ணிட்டோம், ஹ்ம்ம் " என்று அவ்வப்பொழுது ராதிகவைப் பற்றி நினைத்துக் கொள்வான் .

ஒரு ஞாயித்துக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையின் ஒரு ரிசார்ட்டில் அலுவலகத் தோழி ஒருத்தியோடு பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அலைபேசி சிணுங்கியது "ரவி காலிங்". "எக்ஸ்கியூஸ்மீ டியர், கால் அட்டென்ட் பண்ணீட்டு வந்துர்றேன்" அவளிடம் விடை பெற்று விட்டுட்க் கொஞ்சம் தள்ளி வந்து எடுத்தான்.

"ஹலோ ரவி,எப்படி மாமா இருக்க?"

"அதெல்லாம் விடு மச்சி, ஒரு சந்தோஷமான விஷயம் தெரியுமா?"

"என்ன மாமா சொல்ல்லு?" "காலேஜ்ல உன்னைய ஏமாத்திட்டுப் போனாளே ராதிகா, அவ இப்ப அப்பல்லோல அட்மிட் ஆயிருக்காளாம் மச்சி"

"எதுக்கு மாமா? என்ன விஷயம்னு தெரியுமா?"

"நம்ம கூட படிச்சாளே குண்டு லதா, அவள நேத்து பாத்தேன் நங்கநல்லூர் கோயில்ல வச்சு. அவதான் சொன்னா. ஏதோ சீரியஸ் கேஸ் மதிரிதான் தெரியுது"

"அச்சச்சோ, ரவி நாம வேனும்னா போய் பாக்கலாமாடா?"

"என்னடா மச்சி சொல்ற? உன்னைய எவ்ளோ கேவலப்படுத்துனா, அவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். போய் இதக் கொண்டாடுற வழியப் பாப்பியா? போடா, சரி நான் வைக்கிறேன் மச்சி, அப்புறமா பேசுறேன், பை"

"ஹ்ம்ம், பை மாமா". அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அவன் கூட வந்தவளை தேடிப் பார்த்தான். அவள் போதையின் உச்சத்தில் யாருடனோ நடனமாடிக் கொண்டிருந்தாள். "சரி அவளா வந்துக்குவா" நினைத்தபடியே காரைக் கிளப்பிக் கொண்டு வீட்டிற்குப் போனான். படுத்தாலும் உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்தான். ஒன்று, இரண்டு.... இருபது சிகெரட்டுகள் முடிந்தது. கடிகாரம் நாலரை மணியைக் காட்டியது. முடிவோடு போய் குளித்துக் கிளம்பினான். நேரே அவன் கார் அப்பல்லோ மருத்துவமனையின் பார்க்கிங்கில் போய் நின்றது. ரிஷப்சனில் போய்க் கேட்டான்

"ராதிகானு 24 வயசுப் பொண்ணு, அட்மிட் ஆகியிருக்காங்க, கொஞ்சம் எந்த வார்ட்னு சொல்ல முடியுமா?"

அங்கிருந்தவள் கம்ப்யூட்டரை தட்டிப் பார்த்து கூறினாள் "மூணாவது மாடில ரூம் நம்பர் 309"

"என்ன கேஸ்?"

"ட்ரக் கேஸ்"

"தேங்கஸ்" சொல்லி விட்டு லிப்டைப் பிடித்து மேலே போனான். 309ம் அறையின் வாசலில் அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். அவரைப் பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது அவனுக்கு. அவர் ராதிகாவின் அப்பா. நேரே போனான்

"ஹலோ அங்கிள்"

"யாருப்பா நீ?"

"அங்கிள் நா ராதிகாவோட க்ளாஸ்மேட், காலேஜ்ல இருக்கும் போது கூட ஒரு தடவ உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்தவராய் "ஆமா தம்பி. ஞாபகம் இருக்கு, நல்லா இருக்கீங்களா?"

"ம்ம்ம், அங்கிள் ராதிகாவுக்கு என்ன ஆச்சு?"

"அத ஏன் தம்பி கேக்குறீங்க? சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி யு.எஸ் போனா கம்பெனி விஷயமா. அங்க யாரோ ஒரு ராஸ்கல் இவளுக்கு கோக்கேன்னு ஒரு போதப்பழக்கத்த கத்து குடுத்ருக்கான். இவளும் அதுல ரொம்பவே அடிக்ட் ஆயிட்டா. முணே மாசத்துல உடம்பெல்லாம் வெளிரி உருக்குலஞ்சு போச்சு. அப்புறம் அங்க கம்பெனில இருந்த ஒருத்தர் தான் எங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு அவள கம்பெல் பண்ணி இந்தியாக்கு அனுப்புனார். ஏர்போர்ட் போய் பாத்தா எங்களுக்கே அடையாளம் தெரியாத மாதிரி சீரழிஞ்சு போயிருந்தா தம்பி, யாருக்கும் சின்ன கெடுதல் கூட நெனக்க மாட்டா, அவளுக்கு போய் இப்படி" சொல்லும் போதே அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவருக்கு.

"அங்கிள் அழாதிங்க, எல்லாம் சரியாயிடும், சீக்கிரமே, ப்ளீஸ் அங்கிள் அழாதிங்க" தேற்ற முயற்சித்தான் அவன். அழுகையை அடக்கியவராய்
"அப்புறம் இங்க வந்ததுக்கப்புறம் அவளால அந்த கோக்கேன் இல்லாம் இருக்கவே முடியல. போன வாரம் 20 தூக்க மாத்திரைய போட்டு சூசயிட் அட்டெம்ட் பண்ணீட்டா தம்பி. அப்புறம் தான் இங்க கொண்டு வந்து சேத்தோம். இப்போ ட்ரீட்மன்ட்ல கொஞ்சம் பரவாயில்ல, கொஞ்சம் கொஞ்சமா அந்த சனியன மறந்துட்டு வர்றா" விசும்பியபடியே சொல்லி முடித்தார் அவர்.

"ச்சே! ராதிகா காலேஜ்ல இருக்கும் போது எவ்ளோ தெளிவா தைரியமா இருப்பா, அவளா இப்படி பண்ணா? நம்பவே முடியல அங்கிள்"

"என்ன பண்றது, எல்லாம் தலையெழுத்து, கடவுள் புண்ணியத்துல அவ சுகமாயி வந்தானா எங்களுக்கு அதுவே போதும், கல்யாணம் பண்ணிப் பாக்குற ஆசையெல்லாம் கூட எங்களுக்கு இல்ல"

"அங்கிள் நா போய் அவளப் பாக்கலாமா?"

"போய்ப் பாருங்க தம்பி, போங்க".
அந்த அறைக்குள் நுழைந்தான். கசங்கிப் போன மல்லிகைச்சரம் மாதிரி கட்டிலில் கிடந்தாள் ராதிகா. கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் எழும்பும் தோலுமாக இருந்தாள். முடியெல்லாம் கூட கொட்டிப் போயிருந்தது. அவன் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை. "அந்த ராதிகாவா இது? எவ்ளோ அழகாயிருப்பா" அவளை முதன்முதலாகப் பார்த்தபோது இருந்த முகம் அவனுக்குள் வந்து போனது. மெல்ல அவள் தலையில் கை வைத்து வருடினான். கண்விழித்துப் பார்த்தாள் அவள். ஏய் நீயா? எனபது போலிருந்தது அந்தப் பார்வை.

"நீ தூங்குடா தூங்கு" என்றான் அவன். அவள் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வழிந்தது.

சன்னமாகக் கேட்டாள் "எப்ப வந்த?"

"இப்பதான். ஏன்டா இப்படி பண்ண?" என்றான் அவன்.

"என்னவோ அறிவக் கடன் கொடுத்துட்டேன், என்னனு சொல்றது? யேய் நா உன்னைய எவ்ளோ பாடா படுத்துனேன். உனக்கு கொஞ்சங்கூட கோபம் இல்லையாடா?"

"அதெல்லாம் இப்ப எதுக்கு? சத்தியமா எனக்கு எந்த கோபமும் இல்ல. நாந்தான் பைத்தியக்காரத்தனமா நடந்துகிட்டேன், ஸாரிடா".
கதறி விட்டாள் அவள்.அவனிடத்தில் கேட்க வேண்டும் போலிருந்தது
"டேய்! லைப்ல எனக்கு ஒரு லிப்ட் கொடுப்பியடா, ப்ளீஸ்". ஆனால் அவளுக்கு வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர்தான் வந்தது. அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன் "கண்டிப்பாடா செல்லம்".

சர்தார்ஜி ஜோக் ஒன்று....

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? தலைப்பை பார்த்தவுடனே எனக்குத் தோன்றிய சர்தார்ஜி ஜோக் ஒன்று.

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"