Friday, August 25, 2006

கல்லூரி கலாட்டா...... இது ஒரு கதையா???

ஹ்ஹா ஹ்ஹா ஹா...... அந்தக் கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியில் பலமாக சிரிப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. அவனும் அவன் கூட்டாளிகளும் இருக்கும் இடத்தில் சிரிப்பொலிக்கு ஒருபொழுதும் பஞ்சம் இருக்காது. எப்பொழுதுமே ஏதாவாது ஒரு விஷயம் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும். அப்படி அவர்களிடம் தாறுமாறாக சிக்கி கொள்பவர்களில் பொதுவானவர்கள் அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களும் பெண்களின் துப்பட்டாவையே சுற்றி வரும் மாணாக்கரும் தான். அதிலும் அவன் இருக்கிறானே, 'எமகாதகன்'. அவன் கண்முன்னே நடந்த கடலை சமாச்சாரங்களையும் பெண்களிடம் ஆண்கள் வழிந்து நின்ற நிகழ்வுகளையும் மிகைப்படுத்தி பத்து மடங்காக்கி அந்தப் பையன்களை கதறக் கதறக் கேவலப்படுத்துவதில் கைதேர்ந்த கில்லாடி.

சரி... சரி... அவன் அவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அவனைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோமா? அவன் அந்தக் கல்லூரியில் அனைவருக்குமே பரிச்சயமானவன். ஏகப்பட்ட நண்பர்கள் அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரின் மேலும் அதீத பற்றும், நம்பிக்கையும், ம்ரியாதையும் கொண்டவன் அவன். கல்லூரி மாணவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் முதன்மையானவை தம் அடிப்பதும், தண்ணி அடிப்பதும் தான் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருபவன்.

"தம் அடிக்கிறதுலாம் தப்புடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இப்படி தான் சிகெரெட் குடிச்சுட்டே இருப்பார், 40 வயசுலயே கேன்சர் வந்து மேலே போய்ட்டார், தெரியுமா" இப்படி அட்வைஸ் செய்கிறவர்களிடமெல்லாம் "எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் 95 வயசுல, இன்னைக்கும் ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சுருட்டு பிடிக்கிறார்" என்று புகையை விட்டத்தை நோக்கி விட்டபடியே தர்க்கம் செய்பவன் அவன். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் நபர்களிடம் ஒருபொழுதும் பேசவே மாட்டான். அதற்காக அவனை படிப்பில் சோடை என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். ஆனால் அவன் பள்ளிக்காலங்களில் படித்ததை விட இப்போது கொஞ்சம் சுமாராகத்தான் படிக்கிறான். படிப்பைத் தவிர இன்ன சில திறமைகளும் அவனுக்கு உண்டு. அதெல்லாம் இந்தக் கதைக்கு தேவை இல்லை என்பதால் விட்டு விடுவோம்.

கல்லூரி விழாக்களில் அவன் குழுவினர் போடும் நாடகங்களின் கதைகள் எல்லாமே கடலை போட்டதால் பையன்கள் அரியர்ஸ் வாங்கி நிற்பதாகவும், காதலி ஏமாற்றியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பையன்களைப் பற்றியதாகவுமே இருக்கும். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமே, அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களுக்கும் அத்துணைப் பெண்களுக்கும் முதல் எதிரி 'அவன்' 'அவன்' 'அவன்'. சரி கதைக்கு வருவோம்.

அவனும் அவன் கூட்டாளிகளும்தான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் அங்கே. அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் கோபு. அவனுக்கு நேரெதிர்மாரானவன். அந்தக் கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பட்டத்து இளவரசிகளுக்கும் கோபு தான் பாதுகாவலன். அவர்கள் காலையில் கேன்டீனுக்கு செல்வது முதல் மாலை விடுதிக்கு செல்வது வரை கூட இருந்து கூளக்கும்பிடு போடுவது தான் கோபுவுடைய தலையாய வேலை. அவன் அழைத்தான் "டேய் மச்சான் கோபு வாடா".கோபுவைப் பார்த்தவுடனே அவன் கூட்டாளிகளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி சரி ஒருத்தன் சிக்கிட்டான்டானு. அவன் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே கோபுவுக்கு வெலவெலத்தது, இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"என்ன மச்சான் இங்க இருக்கீங்க???" என்றான்.

"ஒன்னுமில்ல சும்மாதான். நீ ஒக்காரு" இது அவன்.

ஹ்ம்ம்ம் என்றான் கோபு.

"சரி கோபு எப்பவுமே எவ கூடனாச்சும் வறுக்குறதுக்குனே கைல ஒரு சட்டி வச்சிருப்பியே, எங்க காணோம்" - இது அவன்.

"என்ன மச்சான்" என்று காதில் விழாதவன் போல் கேட்டான் கோபு.

"வாட் எ பிட்டி, வாட் எ பிட்டி கோபு கைல ஓட்ட சட்டி" என்று அவன் சகாக்களுள் ஒருவன் குரல் கொடுக்க கோபு முகத்தில் ஒரு அசட்டு வழிசல் புன்னகை.

"சரிடா கோபு அந்த சிவில் மகாலிங்கம் உன்கூடவே ஒரு வாரமா சுத்துறானே, என்ன விஷயம்?"-இது அவன்

"அவன் உங்க டிப்பார்ட்மென்ட் லதாவ லவ் பண்றான் மச்சான், அவ எனக்கு ப்ரெண்ட்ல, அதான் ப்ரொப்போஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி" என்றான் கோபு.

"அவனே ஒரு எடுப்பு, இதுல நீ அவனுக்கு துடுப்பா?" - அவன்.

"உங்களுக்கு விருப்பம் இல்லேனா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணல மச்சான், போதுமா" என்றான் கோபு.

"அவன் லதாவ லவ் பண்ணட்டும், இல்லேனா அவங்க அம்மாவக் கூட லவ் பண்ணட்டும், எங்களுக்கு என்னடா வந்துச்சு" - அவன்

முகத்தில் மீண்டும் ஒரு அசட்டுப் புன்னகையை வழிய விட்டான் கோபு.

"டேய் வறுக்குறது தான் வறுக்குறீங்க, கொஞ்சம் அளவா வறுங்கடா. பாரு காலேஜ் பூராவும் எவ்ளோ கருகுன வாடை அடிக்குதுனு. அடிக்கிற வெயில விட உங்க சட்டில இருந்து வர்ற அனல்தான்டா அதிகமா இருக்கு" என்றான் அவன் சகாக்களுள் ஒருவன்.

"சரி மச்சான் நான் கெளம்பட்டுமா" என்றான் கோபு வழிந்தவாறே.

"போ... போ... அந்த 3rd year ஈஸ்வரி இப்பதான் லைப்ரரி பக்கம் போனா, போ போய் சட்டிய ரெடி பண்ணு"என்றான் அவன்.

ஓடியே போய்விட்டான் கோபு. மீண்டும் அவர்கள் அரட்டையைத் தொடர்ந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து வாயில் சிகெரெட்டைப் பற்ற வைத்தவாறே தலைதிரும்பிப் பார்த்தான் அவன்.

லைப்ரரி வாசலில்.... ஈஸ்வரி கையிலிருந்த புத்தகங்களைப் பிடுங்குவதும் கொடுப்பதுமாய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் கோபு.

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.


பி.கு::ஆனால் அந்த 'அவனே' ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு காதல் இவ்வளவு அழகானதா!!! என்று வியந்து கவிதைகள் எல்லாம் எழுதியது சுவாரசியமான தனிக்கதை...


மேலும் அவனுடைய கல்லூரிக்கால கலாட்டாக்கள் தொடர்வது உங்களுடைய அன்பான பின்னூட்டங்களைப் பொறுத்ததே

Thursday, August 24, 2006

உனக்காகத் தானே...

உனக்காகத் தானே !!!

விட்டுக் கொடுத்தேன்....

எனது புகைப் பழக்கத்தை....

எனது புரட்சி சிந்தனைகளை....

பல தோழிகளை.....

சில தோழர்களை....

அட இத்தனை எதற்கடி???

உன்னை விட்டுக்கொடுத்தது கூட

உனக்காகத் தானே !!!

Sunday, August 13, 2006

அந்த நாள் ஞாபகம்......

நான் எனது பள்ளிப்பருவத்து நினைவுகளை அசை போடுவதற்காக கடந்த சனிக்கிழமை எனது பள்ளிக்குச் சென்றேன்... சில்லென வீசிய வேப்பங் குளிர்க்காற்றில் பின்னோக்கி விரிந்த எனது நினைவுகளின் சில துளிகள் இங்கே... இதே நினைவுகள் அரசு ஆண்கள் பள்ளிகளில் படித்த பலருக்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்...

தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை...
காலத்தால் காக்கப்பட்டு வரும் அரும்பெரும் பொக்கிஷம். என்னைப் போன்றே பலரையும் உருவாக்கி உருவப்படுத்தியிருப்பதில் 160 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்தக் கல்விக்கூடம் ஒரு அன்னைக்கூடமாய் மாறியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த நாட்களிலே....

9 மணி பள்ளிக்கு காலை 8 மணிக்கே தொடங்கி விடும் சைக்கிள் பயணம்,ஏழெட்டு நண்பர்களாய் கதைத்துக் கொண்டு அழுத்தி வரும் அந்த பயணம், எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இன்று கிடைக்கத அந்த பயணம்....

வாசலில் வந்து பேன்ட்டு களைந்து அரைக்கால் ட்ரவுசரோடு உள்ளே வந்த அந்த நாட்கள்....

ஸ்௯ல் அட்டேன்ஷன் தொடங்கி "சருவலோகதிபா நமஷ்காரம்" வழியாக "ஜண கண மண" பாடிய கூட்டுப்பிரார்த்தனைகள்...

"அக்கா!!!! ஒரு ரூபாய்க்கு மாங்கா குடுங்க", "அண்ணே 50 காசு ஜூஸ் ஒன்னு 1 ரூபா ஜூஸ் ஒன்னு", "பாண்டியன் ஒரு மேங்கோ ஐஸ்" என்று வாங்கித்தின்ற இடைவேளைப் பொழுதுகள்...

10 பேர், 15 பேர் கூடிப் பகிர்ந்து பேசி சிரித்து சம்சாக்களோடும் வடைகளோடும் உணவு உண்டுக் களித்த புளியமரத்தடி நிழல்......

ஒரு பாடத்தில் பெயில் ஆனால் ஒரு அடி வீதம் ஆளுக்குத் தகுந்தாற் போல் வாங்கிய அடிகள்....

சட்டை கழற்றி உள் பனியனோடு கூட உலா வந்த விளையாட்டுப் பாடவேளைகள்.... அதிலே விளையாடிய
ஏழுகற்கள், எறிப்பந்துகள்...

போட்டுக் காட்டிய நாடகங்கள், பேசிப் பழகிய மேடைகள், எழுதிய கவிதைகள்... அதிலே வென்று குவித்த பரிசுகள்...

அதிகாலை நேரத்திலே 5 மணிக்கு லாம் வந்து கலந்து கொண்ட NCC பரேடுகள்....(இப்பல்லாம் நெனச்சாக் கூட 12 மணிக்கு முன்னாடி எந்திரிக்க முடியல)

"உள்ள மட்டும் நானே உசிரக் கூடத்தானே நண்பண் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" என்று பாடித்திரிந்த நட்பு வட்டங்கள்...

கோயில்மணி சாரிடம் டியூஷன் என்று சொல்லி தண்ணீர் டேங்கிற்கு பின்னால் நின்று "மாப்ளே இவ லட்டு; இவ ஜாங்கிரி; " என்று அடித்த சைட்டுகள்....

சொட்டை என்றும் வழுக்கை என்றும் குண்டன் என்றும் காட்டான் என்றும் வாத்தியார்களுக்கு இட்ட புனைப் பெயர்கள்... அவர்களைப் போலவே பேசிக்காட்டி நடித்துக்காட்டி மகிழ்ந்திட்ட கணங்கள்.......

வருடத்திற்கு ஏழு நாட்கள் நடக்கும் ஐ.எம்.எஸ். விற்பனைத் திருவிழா.... அவற்றில் நாம் கொடுத்த சின்ன சின்ன பங்களிப்புகள்......

இன்னும் எத்தனையோ பசுமையான, செழுமையான, ஆத்மார்த்தமான நினைவுகள் நம் பள்ளிப்பருவத்து நாட்களிளே....ஆனால் இன்று
என் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தில்...
சிலர் மருத்துவர்களாய்... சிலர் வழக்குரைங்கர்களாய்... பலர் பொறியாளர்களய்...

ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இந்த நினைவுகள் புதைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே........

Sunday, August 06, 2006

கடைசி ஆசை..... எனது கன்னி சிறுகதை முயற்சி......

கடைசி ஆசை.......

மரத்தின் மீது சாய்ந்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் சசி. நெருங்கி வந்த உயர்ந்த மனிதன் சசியின் தோளில் கை வைத்துக் கேட்டான்,

என்ன சசி இங்க நின்னுட்டு இருக்கீங்க??

சும்மாதான் சார், சரி ஆரம்பிக்க எவ்வளவு நேரம் சார் ஆகும்??

ஒரு அரை மணி நேரம் ஆகும்னு நெனக்கிறேன் சசி, ம்ம்ம்ம்.... சரி உங்க கடைசி ஆசை என்ன சசி? என்ன கேக்க போறீங்க???

அதான் சார் யோசிச்சிட்டுருக்கேன் .... என் அனன்யாவுக்காக தான் எதாவது கேக்கனும்.....

உங்க கடைசி ஆசை ௯ட அவங்களுக்காக தானா???

ஆமா சார், என் வாழ்க்கை, எண்ணங்கள் எல்லாமே அவதான் சார்.இந்த உலகத்துல என்னைய முழுசா புரிஞ்சுகிட்ட ஒரே ஜீவன்னா அது அவ மட்டும் தான் சார். அதுனால என்னோட கடைசி ஆசை ௯ட அவளுக்காக தான்.

சசி, உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்கள மாதிரி ஒருத்தர் கெடச்சதுக்கு அவங்க ரொம்பவே குடுத்து வச்சிருக்கணும்........

புன்னகைத்தான் சசி... பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த தடித்தவர் வந்து சொன்னார் " சார் எல்லாம் ரெடி ஆயிருச்சு"

அப்படியா, மேடை ரெடி ஆயிருச்சா???

ஆமா சார் ரெடி ஆயிருச்சு

ம்ம்..... வாங்க சசி போகலாம்.
மூவரும் நடக்கத் தொடங்கினார்கள்.......
.
.
.
.
.
ஸ்டார்ட் கேமரா,.. ஆக்ஷ்சன்.....

அந்த உயர்ந்த மனிதன் பேச தொடங்கினான் " Welcome Back Viewers, This is Prajin from kalakkal TV's "ஆசைப்படுங்கள் ஆணையிடுங்கள்". வழக்கம் போல இந்த வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி நேயர தேர்ந்தெடுத்து அவரோட எட்டு ஆசைகள நிறைவேற்றி வைக்கிறோம்.. அந்த வகைல இந்த வார அதிர்ஷ்ட்சாலி நேயர் சசி American Teddy Bear la தொடங்கி அவரோட முதல் ஏழு ஆசைகளையும் அவரோட காதல் மனைவி அனன்யாவுக்காக கேட்ருக்கார். இப்போ அவரோட எட்டாவது ஆசை,

சொல்லுங்க சசி இந்த நிகழ்ச்சிக்கான உங்களோட கடைசி ஆசை என்ன??

வெட்க்கப்பட்டுக் கொண்டே கேட்டான் சசி "என்னோட அனன்யாவோட எடைக்கு எடையா அவளுக்கு பிடிச்ச Cadburys Diarymilk வேணும் சார்"....


புன்னகை தவழ அந்த பிரம்மாண்ட தராசில் அமர்ந்து கொண்டிருந்தாள் அனன்யா.....