Sunday, August 13, 2006

அந்த நாள் ஞாபகம்......

நான் எனது பள்ளிப்பருவத்து நினைவுகளை அசை போடுவதற்காக கடந்த சனிக்கிழமை எனது பள்ளிக்குச் சென்றேன்... சில்லென வீசிய வேப்பங் குளிர்க்காற்றில் பின்னோக்கி விரிந்த எனது நினைவுகளின் சில துளிகள் இங்கே... இதே நினைவுகள் அரசு ஆண்கள் பள்ளிகளில் படித்த பலருக்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்...

தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை...
காலத்தால் காக்கப்பட்டு வரும் அரும்பெரும் பொக்கிஷம். என்னைப் போன்றே பலரையும் உருவாக்கி உருவப்படுத்தியிருப்பதில் 160 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்தக் கல்விக்கூடம் ஒரு அன்னைக்கூடமாய் மாறியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த நாட்களிலே....

9 மணி பள்ளிக்கு காலை 8 மணிக்கே தொடங்கி விடும் சைக்கிள் பயணம்,ஏழெட்டு நண்பர்களாய் கதைத்துக் கொண்டு அழுத்தி வரும் அந்த பயணம், எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இன்று கிடைக்கத அந்த பயணம்....

வாசலில் வந்து பேன்ட்டு களைந்து அரைக்கால் ட்ரவுசரோடு உள்ளே வந்த அந்த நாட்கள்....

ஸ்௯ல் அட்டேன்ஷன் தொடங்கி "சருவலோகதிபா நமஷ்காரம்" வழியாக "ஜண கண மண" பாடிய கூட்டுப்பிரார்த்தனைகள்...

"அக்கா!!!! ஒரு ரூபாய்க்கு மாங்கா குடுங்க", "அண்ணே 50 காசு ஜூஸ் ஒன்னு 1 ரூபா ஜூஸ் ஒன்னு", "பாண்டியன் ஒரு மேங்கோ ஐஸ்" என்று வாங்கித்தின்ற இடைவேளைப் பொழுதுகள்...

10 பேர், 15 பேர் கூடிப் பகிர்ந்து பேசி சிரித்து சம்சாக்களோடும் வடைகளோடும் உணவு உண்டுக் களித்த புளியமரத்தடி நிழல்......

ஒரு பாடத்தில் பெயில் ஆனால் ஒரு அடி வீதம் ஆளுக்குத் தகுந்தாற் போல் வாங்கிய அடிகள்....

சட்டை கழற்றி உள் பனியனோடு கூட உலா வந்த விளையாட்டுப் பாடவேளைகள்.... அதிலே விளையாடிய
ஏழுகற்கள், எறிப்பந்துகள்...

போட்டுக் காட்டிய நாடகங்கள், பேசிப் பழகிய மேடைகள், எழுதிய கவிதைகள்... அதிலே வென்று குவித்த பரிசுகள்...

அதிகாலை நேரத்திலே 5 மணிக்கு லாம் வந்து கலந்து கொண்ட NCC பரேடுகள்....(இப்பல்லாம் நெனச்சாக் கூட 12 மணிக்கு முன்னாடி எந்திரிக்க முடியல)

"உள்ள மட்டும் நானே உசிரக் கூடத்தானே நண்பண் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" என்று பாடித்திரிந்த நட்பு வட்டங்கள்...

கோயில்மணி சாரிடம் டியூஷன் என்று சொல்லி தண்ணீர் டேங்கிற்கு பின்னால் நின்று "மாப்ளே இவ லட்டு; இவ ஜாங்கிரி; " என்று அடித்த சைட்டுகள்....

சொட்டை என்றும் வழுக்கை என்றும் குண்டன் என்றும் காட்டான் என்றும் வாத்தியார்களுக்கு இட்ட புனைப் பெயர்கள்... அவர்களைப் போலவே பேசிக்காட்டி நடித்துக்காட்டி மகிழ்ந்திட்ட கணங்கள்.......

வருடத்திற்கு ஏழு நாட்கள் நடக்கும் ஐ.எம்.எஸ். விற்பனைத் திருவிழா.... அவற்றில் நாம் கொடுத்த சின்ன சின்ன பங்களிப்புகள்......

இன்னும் எத்தனையோ பசுமையான, செழுமையான, ஆத்மார்த்தமான நினைவுகள் நம் பள்ளிப்பருவத்து நாட்களிளே....ஆனால் இன்று
என் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தில்...
சிலர் மருத்துவர்களாய்... சிலர் வழக்குரைங்கர்களாய்... பலர் பொறியாளர்களய்...

ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இந்த நினைவுகள் புதைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே........

2 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பழைய ஞாபகங்களை தோண்டிவிட்டது ராம்குமார்..

ராம்குமார் அமுதன் said...

நன்றி நிலவு நண்பன்..... அந்த நோக்கத்தோடு எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.......