Friday, August 25, 2006

கல்லூரி கலாட்டா...... இது ஒரு கதையா???

ஹ்ஹா ஹ்ஹா ஹா...... அந்தக் கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியில் பலமாக சிரிப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. அவனும் அவன் கூட்டாளிகளும் இருக்கும் இடத்தில் சிரிப்பொலிக்கு ஒருபொழுதும் பஞ்சம் இருக்காது. எப்பொழுதுமே ஏதாவாது ஒரு விஷயம் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும். அப்படி அவர்களிடம் தாறுமாறாக சிக்கி கொள்பவர்களில் பொதுவானவர்கள் அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களும் பெண்களின் துப்பட்டாவையே சுற்றி வரும் மாணாக்கரும் தான். அதிலும் அவன் இருக்கிறானே, 'எமகாதகன்'. அவன் கண்முன்னே நடந்த கடலை சமாச்சாரங்களையும் பெண்களிடம் ஆண்கள் வழிந்து நின்ற நிகழ்வுகளையும் மிகைப்படுத்தி பத்து மடங்காக்கி அந்தப் பையன்களை கதறக் கதறக் கேவலப்படுத்துவதில் கைதேர்ந்த கில்லாடி.

சரி... சரி... அவன் அவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அவனைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோமா? அவன் அந்தக் கல்லூரியில் அனைவருக்குமே பரிச்சயமானவன். ஏகப்பட்ட நண்பர்கள் அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரின் மேலும் அதீத பற்றும், நம்பிக்கையும், ம்ரியாதையும் கொண்டவன் அவன். கல்லூரி மாணவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் முதன்மையானவை தம் அடிப்பதும், தண்ணி அடிப்பதும் தான் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருபவன்.

"தம் அடிக்கிறதுலாம் தப்புடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இப்படி தான் சிகெரெட் குடிச்சுட்டே இருப்பார், 40 வயசுலயே கேன்சர் வந்து மேலே போய்ட்டார், தெரியுமா" இப்படி அட்வைஸ் செய்கிறவர்களிடமெல்லாம் "எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் 95 வயசுல, இன்னைக்கும் ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சுருட்டு பிடிக்கிறார்" என்று புகையை விட்டத்தை நோக்கி விட்டபடியே தர்க்கம் செய்பவன் அவன். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் நபர்களிடம் ஒருபொழுதும் பேசவே மாட்டான். அதற்காக அவனை படிப்பில் சோடை என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். ஆனால் அவன் பள்ளிக்காலங்களில் படித்ததை விட இப்போது கொஞ்சம் சுமாராகத்தான் படிக்கிறான். படிப்பைத் தவிர இன்ன சில திறமைகளும் அவனுக்கு உண்டு. அதெல்லாம் இந்தக் கதைக்கு தேவை இல்லை என்பதால் விட்டு விடுவோம்.

கல்லூரி விழாக்களில் அவன் குழுவினர் போடும் நாடகங்களின் கதைகள் எல்லாமே கடலை போட்டதால் பையன்கள் அரியர்ஸ் வாங்கி நிற்பதாகவும், காதலி ஏமாற்றியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பையன்களைப் பற்றியதாகவுமே இருக்கும். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமே, அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களுக்கும் அத்துணைப் பெண்களுக்கும் முதல் எதிரி 'அவன்' 'அவன்' 'அவன்'. சரி கதைக்கு வருவோம்.

அவனும் அவன் கூட்டாளிகளும்தான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் அங்கே. அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் கோபு. அவனுக்கு நேரெதிர்மாரானவன். அந்தக் கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பட்டத்து இளவரசிகளுக்கும் கோபு தான் பாதுகாவலன். அவர்கள் காலையில் கேன்டீனுக்கு செல்வது முதல் மாலை விடுதிக்கு செல்வது வரை கூட இருந்து கூளக்கும்பிடு போடுவது தான் கோபுவுடைய தலையாய வேலை. அவன் அழைத்தான் "டேய் மச்சான் கோபு வாடா".கோபுவைப் பார்த்தவுடனே அவன் கூட்டாளிகளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி சரி ஒருத்தன் சிக்கிட்டான்டானு. அவன் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே கோபுவுக்கு வெலவெலத்தது, இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"என்ன மச்சான் இங்க இருக்கீங்க???" என்றான்.

"ஒன்னுமில்ல சும்மாதான். நீ ஒக்காரு" இது அவன்.

ஹ்ம்ம்ம் என்றான் கோபு.

"சரி கோபு எப்பவுமே எவ கூடனாச்சும் வறுக்குறதுக்குனே கைல ஒரு சட்டி வச்சிருப்பியே, எங்க காணோம்" - இது அவன்.

"என்ன மச்சான்" என்று காதில் விழாதவன் போல் கேட்டான் கோபு.

"வாட் எ பிட்டி, வாட் எ பிட்டி கோபு கைல ஓட்ட சட்டி" என்று அவன் சகாக்களுள் ஒருவன் குரல் கொடுக்க கோபு முகத்தில் ஒரு அசட்டு வழிசல் புன்னகை.

"சரிடா கோபு அந்த சிவில் மகாலிங்கம் உன்கூடவே ஒரு வாரமா சுத்துறானே, என்ன விஷயம்?"-இது அவன்

"அவன் உங்க டிப்பார்ட்மென்ட் லதாவ லவ் பண்றான் மச்சான், அவ எனக்கு ப்ரெண்ட்ல, அதான் ப்ரொப்போஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி" என்றான் கோபு.

"அவனே ஒரு எடுப்பு, இதுல நீ அவனுக்கு துடுப்பா?" - அவன்.

"உங்களுக்கு விருப்பம் இல்லேனா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணல மச்சான், போதுமா" என்றான் கோபு.

"அவன் லதாவ லவ் பண்ணட்டும், இல்லேனா அவங்க அம்மாவக் கூட லவ் பண்ணட்டும், எங்களுக்கு என்னடா வந்துச்சு" - அவன்

முகத்தில் மீண்டும் ஒரு அசட்டுப் புன்னகையை வழிய விட்டான் கோபு.

"டேய் வறுக்குறது தான் வறுக்குறீங்க, கொஞ்சம் அளவா வறுங்கடா. பாரு காலேஜ் பூராவும் எவ்ளோ கருகுன வாடை அடிக்குதுனு. அடிக்கிற வெயில விட உங்க சட்டில இருந்து வர்ற அனல்தான்டா அதிகமா இருக்கு" என்றான் அவன் சகாக்களுள் ஒருவன்.

"சரி மச்சான் நான் கெளம்பட்டுமா" என்றான் கோபு வழிந்தவாறே.

"போ... போ... அந்த 3rd year ஈஸ்வரி இப்பதான் லைப்ரரி பக்கம் போனா, போ போய் சட்டிய ரெடி பண்ணு"என்றான் அவன்.

ஓடியே போய்விட்டான் கோபு. மீண்டும் அவர்கள் அரட்டையைத் தொடர்ந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து வாயில் சிகெரெட்டைப் பற்ற வைத்தவாறே தலைதிரும்பிப் பார்த்தான் அவன்.

லைப்ரரி வாசலில்.... ஈஸ்வரி கையிலிருந்த புத்தகங்களைப் பிடுங்குவதும் கொடுப்பதுமாய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் கோபு.

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.


பி.கு::ஆனால் அந்த 'அவனே' ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு காதல் இவ்வளவு அழகானதா!!! என்று வியந்து கவிதைகள் எல்லாம் எழுதியது சுவாரசியமான தனிக்கதை...


மேலும் அவனுடைய கல்லூரிக்கால கலாட்டாக்கள் தொடர்வது உங்களுடைய அன்பான பின்னூட்டங்களைப் பொறுத்ததே

7 comments:

சீமாச்சு.. said...

நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

அன்புடன்,
சீமாச்சு...

ராம்குமார் அமுதன் said...

அன்பின் சீமாச்சு தங்களுடைய பாரட்டுதல்களுக்கு மிக்க நன்றி... கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.....

நாமக்கல் சிபி said...

ராம் குமார்,
இந்த மாதிரி ரவுசு பண்ற பசங்க தான் ரொம்ப டீப்பா லவ் பண்ணுவாங்க...

தொடர்ந்து எழுதவும்... பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

ராம்குமார் அமுதன் said...

//இந்த மாதிரி ரவுசு பண்ற பசங்க தான் ரொம்ப டீப்பா லவ் பண்ணுவாங்க...//


உண்மை தான் தல..... ஆனா அந்த காதல் கைகூடுச்சா???? சீக்கிரமே அடுத்த கதைல சொல்றேன்......

கதிர் said...

யாருக்காக வேணாலும் தம் அடிக்கறத விடலாம், ஆனால் லவ் பண்றன்னு சொல்ற பொண்ணுக்காக மட்டும் தம்ம நிறுத்தறது என்னை பொறுத்தவரை, கொடுத்து வாங்குவது போல.

ஆவி அம்மணி said...

டெம்ப்ளேட் பேக்ரவுண்ட் கலரை மாத்தப்படாதா? பயமா கீது!

ராம்குமார் அமுதன் said...

On behalf of all Ur requests I ve changed ma Backgrond Template.... Thanx 4 the Suggestion frendz....